search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு குழுவினர் ஆய்வு"

    தொடர் மழை காரணமாக இடுக்கி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் ஆற்றின் கரையோரத்தில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IdukkiDam
    இடுக்கி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக இடுக்கி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட அந்த இடுக்கி அணையில், நேற்றைய நிலவரப்படி 2,395.96 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இடுக்கி அணையில் மதகுகள் இல்லாததால் துணை அணையான செருதோணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்ததால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல பெரியாற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களிடம் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் வீடு, வீடாக சென்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இடுக்கி அணையை, அணைகள் பாதுகாப்பு குழு தலைமை என்ஜினீயர் பாபுராஜ் தலைமையில் நிர்வாக என்ஜினீயர் பாலு, உதவி நிர்வாக என்ஜினீயர் ஸ்ரீகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் துணை அணையான செருதோணி அணையையும் அவர்கள் பார்வையிட்டனர். இரு அணைகளிலும் உள்ள நீரின் அளவை சரிபார்த்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு தண்ணீர் திறந்தால் போதுமானது. மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதின் மூலம் மின்உற்பத்தியை பெருக்கினால், மாநிலத்தில் நிலவும் மின்பற்றாக்குறை நீங்கும்’ என்றனர்.

    முன்னதாக இடுக்கி அணையை நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.தாமஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இடுக்கி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அணை பாதுகாப்பான நிலையில் உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அணை திறக்கப்பட்டால் செருதோணி முதல் லோயர் பெரியாறு வரை ஆற்றின் கரையோரத்தில் குடியிருப்போர் பாதிக்கப்படுவார்கள். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdukkiDam
    ×